விழுப்புரத்தில்பள்ளி- கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி


விழுப்புரத்தில்பள்ளி- கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பள்ளி- கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது.

விழுப்புரம்


விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சார்பில் நேற்று மாலை மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இங்கு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க வந்துள்ள மாணவர்களாகிய நீங்கள், இங்கு ஓடுவது மட்டுமல்லாமல் தினந்தோறும் காலை அரை மணி நேரமாவது உங்களது பெற்றோரையும், உறவினர்களையும் ஓடச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் உடல்நலம் சீராக இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்த மாரத்தான் போட்டி நடக்கிறது என்றார் அவர்.

1,000 பேர் பங்கேற்பு

இந்த மாரத்தான் போட்டிகள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், பள்ளி- கல்லூரி மாணவிகள், பொதுப்பிரிவினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனியாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக ஓடி இலக்கை அடைந்தவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.1,000-ம் மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் வளாகத்தில் இருந்து தொடங்கி திருச்சி நெடுஞ்சாலை, நான்குமுனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை, கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாக பின்புறம் உள்ள சாலை வழியாக மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் முடிவடைந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சி.பழனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.பி.க்கள் டாக்டர் பொன். கவுதமசிகாமணி, துரை.ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன்,

விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக பணியாளர் சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story