மாவோயிஸ்டு தலைவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்


மாவோயிஸ்டு தலைவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 7 Oct 2023 12:45 AM IST (Updated: 7 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நெடுகல்கம்பையில் போஸ்டர் ஒட்டிய வழக்கு தொடர்பாக, மாவோயிஸ்டு தலைவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீலகிரி

நெடுகல்கம்பையில் போஸ்டர் ஒட்டிய வழக்கு தொடர்பாக, மாவோயிஸ்டு தலைவர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கம்பையில், கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அரசுக்கு எதிராகவும், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க கோரியும் மாவோயிஸ்டுகள் போஸ்டர்களை ஒட்டினர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பழங்குடியின மக்கள் கொடுத்த தகவலின்பேரில் கொலக்கம்பை போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மாவோயிஸ்டுகளான கோவையை சேர்ந்த டேனிஷ் என்ற கிருஷ்ணன், கர்நாடகாவை சேர்ந்த ஷோபா ஆகியோரை கைது செய்தனர்.

ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

இதற்கிடையே 9.11.2021 அன்று வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு மாவோயிஸ்டு இயக்க தலைவரான கர்நாடகாவை சேர்ந்த சாவித்திரியை கேரள மாநில போலீசார் கைது செய்தனர். திருச்சூர் சிறையில் உள்ள அவரிடம், நெடுகல்கம்பையில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஊட்டி கோர்ட்டில் போலீசார் அனுமதி பெற்றனர். அதன்படி திருச்சூர் சிறையில் இருந்து சாவித்திரியை ஊட்டிக்கு கொலக்கொம்பை போலீசார் அவ்வப்போது அழைத்து வந்து ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மாவோயிஸ்டு தலைவர் சாவித்திரியை நேற்று ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து வருகிற 13-ந் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நெடுநல்கம்பையில் போஸ்டர் ஒட்டிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சாவித்திரி, அடையாள அணிவகுப்புக்காக கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதேபோல் நெடுகல்கம்பை கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அடையாள அணிவகுப்பு முடிந்து மீண்டும் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றனர்.


Next Story