மஞ்சப்பை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
திண்டுக்கல்லில் மஞ்சப்பை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நேற்று நடத்தியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமை தாங்கி, கொடியசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில் 400-க்கும் மேற்பட்டவர்களும், பெண்கள் பிரிவில் 250-க்கும் மேற்பட்டவர்களும் மஞ்சள் நிற டீ-சர்ட் அணிந்து ஓடினர்.
இந்த மினி மாரத்தான் போட்டி கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் தொடங்கி, பஸ் நிலையம், மணிக்கூண்டு, வெள்ளை விநாயகர் கோவில், பழனி சாலை, தாடிக்கொம்பு சாலை, எம்.வி.எம்.கல்லூரி வழியாக சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவு அடைந்தது. இதில் வெற்றி பெற்றவர்களில் ஆண்கள் பிரிவில் 7 பேருக்கும், பெண்கள் பிரிவில் 7 பேருக்கும் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1,000-மும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை ஆர்.டி.ஓ. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட பொறியாளர் மணிமாறன், உதவி செயற்பொறியாளர் உதயா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.