மணிப்பூர் கொடூரம்: பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்திய நாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது - கனிமொழி டுவீட்


மணிப்பூர் கொடூரம்: பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்திய நாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது - கனிமொழி டுவீட்
x

பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்திய நாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை,

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. மணிப்பூரின் இந்த கொடூர சம்பவத்துக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி உருக்கமாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்திய நாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்களின் பாதுகாப்பில் உறுதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story