கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை பறிமுதல் செய்ய வேண்டும்


கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை பறிமுதல் செய்ய வேண்டும்
x

வடகாடு பகுதியில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

மா மரங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வீடுகள் மற்றும் தோட்டங்களில் நாட்டு மா மரங்களை வைத்து பராமரித்து வருகின்றனர். அவைகள் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கண்டு மா மரங்கள் தோறும் மாங்காய்கள் கொத்து, கொத்தாக காய்த்து தொங்கி வருவது காண்போரை கவர்ந்து வருகின்றன.

இங்கு உற்பத்தி ஆகும் மாங்காய்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளில் விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவைகள் பெரும்பாலும் உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆர்வமுடன் வாங்குகின்றனர்

இந்நிலையில் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்களை ஒரு சில வியாபாரிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அவைகள் கண்ணை பறிக்கும் வகையில், இருப்பதால் அவ்வழியாக செல்லும் பலரும் அவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

ஒரு கிலோ மற்றும் 1½ கிலோ மாம்பழங்கள் ரூ.100-க்கு விற்பனை ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்லும் மாம்பழங்கள் குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இப்படி வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் மாம்பழங்கள் இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படுவதாகவும், இவற்றை வாங்கி உண்பதன் மூலமாக, உடல் உபாதைகள் ஏற்படுவதோடு கேன்சர் போன்ற பெரு வியாதிகளையும் உருவாக்கும். இப்படி இயற்கைக்கு மாறாக, கார்பைடு கல், ரசாயன கலவைகளை பயன்படுத்தி மாம்பழம் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் ரசாயன கற்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் தண்ணீரில் போட்டால் மிதக்கும் எனவும், இயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் தண்ணீரில் போட்டால் அது தண்ணீரில் மூழ்கி விடும் எனவும் கூறப்படுகிறது.


Next Story