மாநில கைப்பந்து போட்டியில் மணப்பாறை அணி வெற்றி
மாநில கைப்பந்து போட்டியில் மணப்பாறை அணி வெற்றி பெற்றது.
மணப்பாறை:
மணப்பாறையில் கே.என்.ராமஜெயம் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை ராமஜெயம் நினைவு கிளப் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டன. சுகம் மருத்துவமனை திடலில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் மணப்பாறை ராமஜெயம் மெமோரியல் கிளப் அணியினரும், கோவை கற்பகம் அணியினரும் மோதினர். இதில் ராமஜெயம் மெமோரியல் அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், கோவை அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது. 3-ம் இடத்தை ஜே.பி.ஆர். சென்னை அணியும், கோவை பி.எஸ்.சி. அணி 4-ம் இடத்தையும், திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணி 5-ம் இடத்தையும் பெற்றது.
இதேபோல் பெண்கள் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் திருச்சி போலீஸ் அணியும், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும் மோதின. இதில் திருச்சி போலீஸ் அணி வெற்றி பெற்று முதல் இடம் பிடித்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், சென்னை பனிமலர் அணி 3-ம் இடத்தையும், சென்னை ஜே.பி.ஆர். அணி 4-ம் இடத்தையும், சேலம் மேரிஸ் அணி 5-ம் இடத்தையும் பிடித்தது. இதில் வெற்றி பெற்று முதல் 5 இடங்களை பிடித்த அணிகளுக்கு ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை தி.மு.க. முன்னாள் நகர துணைச் செயலாளர் ஏ.பி.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், ஆகியோர் செய்திருந்தனர். போட்டிகளை மாநில அளவிலான கைப்பந்து வீரர்கள் நவநீதன், கார்த்திகேயன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். போட்டிகளை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.