மணப்பாறை நகராட்சியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது
மணப்பாறை நகராட்சியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது.
மணப்பாறை:
மணப்பாறை நகராட்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேரும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 11 பேரும், சுயேச்சைகள் 5 பேரும் என மொத்தம் 27 பேர் வெற்றி பெற்று, நகர்மன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி நடைபெற்ற நகர்மன்ற தலைவருக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுதா பாஸ்கரன் என்பவர் 15 வாக்குகள் பெற்று நகர்மன்ற தலைவராக பொறுப்பெற்றார்.
பின்னர் நகர்மன்ற துணைத் தலைவருக்கான தேர்தல் மூன்று முறை அறிவிக்கப்பட்டும் போதிய நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்காததால் தேர்தல் நடைபெறவில்லை. இதேபோல் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறவில்லை. இந்நிலையில் சுதா பாஸ்கரன் நகர்மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
மறைமுக தேர்தல்
இதைத்தொடர்ந்து மணப்பாறை நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மணப்பாறை நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் வைத்தியநாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். 9.30 மணி முதல் 10 மணி வரை வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் வழங்கப்பட்டது.
இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் கீதா.ஆ.மைக்கேல்ராஜ் என்பவரும், அ.தி.மு.க. சார்பில் ராமன் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குச்சீட்டை செலுத்தினர். பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 27 வாக்குகளில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கீதா.ஆ.மைக்கேல்ராஜ் 18 வாக்குகளும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராமன் 8 வாக்குகளும் பெற்றனர். ஒரு வாக்கு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கீதா.ஆ.மைக்கேல் ராஜ் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். அதற்கான சான்றிதழும் அவரிடம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதியம் நகர்மன்ற துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் முத்துலெட்சுமி கோபியும், அ.தி.மு.க. சார்பில் எத்திராஜும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து நடந்த மறைமுக தேர்தலில் நகர்மன்ற தலைவராக வெற்றி பெற்றவரை தவிர மற்ற கவுன்சிலர்கள் வாக்கு அளித்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் முத்துலெட்சுமி கோபி 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எத்திராஜ் 10 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற முத்துலெட்சுமி கோபிக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி வழங்கினார்.
56 ஆண்டுகள் தி.மு.க. வசம் இருந்த மணப்பாறை நகர்மன்றம், முதல்முறையாக கடந்த மார்ச் மாதம் அ.தி.மு.க. வசமானது. ஆனால் சில மாதங்களிலேயே மீண்டும் தற்போது தி.மு.க. வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.