மானாமதுரை நகராட்சி கூட்டம்
மானாமதுரை நகராட்சி கூட்டம் நடைபெற்றது.
மானாமதுரை
மானாமதுரை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. கமிஷனர் ரெங்கநாயகி, துணைத்தலைவர் பாலசுந்தரம், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- தலைவர் மாரியப்பன் கென்னடி:- மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் தொடர்ந்து கடை நடத்தி வருபவர்கள் வாடகையுடன் 15 சதவீதம் உயர்த்தி வழங்கி தொடர்ந்து அவர்கள் கடை நடத்தலாம். கடை வேண்டாம் என கூறினால் அந்த கடைக்கு மட்டும் ஏலம் விடப்படும்.
கவுன்சிலர் இந்துமதி:- ராம் நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தலைவர்:- விரைவில் அனைத்து வார்டு பகுதிகளிலும் தெரு விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்படும்.
தெய்வேந்திரன்:- தல்லாகுளம் மயானம் அருகே எவ்வித அனுமதியுமின்றி புதிதாக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இது போன்ற ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆணையாளர் ரெங்கநாயகி:- விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கங்காதேவி:- நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம்:- நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.