போலி மாதாந்திர பால் அட்டைகளை கண்டறிய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை


போலி மாதாந்திர பால் அட்டைகளை கண்டறிய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை
x

போலி மாதாந்திர அட்டைகளை அகற்ற ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை,

சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து கம்ப்யூட்டரில் இருந்து போலி மாதாந்திர அட்டைகளை அகற்ற ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை தொடர்ந்து ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் ரேஷன் கார்டு அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களின் நகலை ஆவின் நிறுவனத்தில் கொடுத்த பின்னரே தங்களுடைய மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க முடியும்.

மேலும் பால் அட்டைதாரர்கள் தாங்களாகவே மண்டல அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்களை வழங்கி அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். மேலும் ஒரு ரேஷன் கார்டுக்கு ஆரஞ்சு பால் பாக்கெட் தினமும் 1 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வாடிக்கையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது தினமும் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 6.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது.

இதில் 4 லட்சம் லிட்டர் நீல நிற பால் பாக்கெட்டுகளும், 2 லட்சம் லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகளும், 7 ஆயிரம் லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. மாதாந்திர அட்டைகள் மூலம் பால் பாக்கெட் பெறுபவர்கள் அதற்கான தொகையை முன்கூட்டியே செலுத்தி விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story