வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
பெண் தகராறில் வாலிபரை கொலை செய்தவருக்கு பட்டுக்கோட்டை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
முன்விரோதம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பைசல். இவரது தம்பி காஜா முகைதீன்(வயது 23).
அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை நண்டு வெட்டித்தெருவை சேர்ந்தவர் காதர் முகைதீன். இவரது சகோதரியுடன் காஜா முகைதீன் அண்ணன் பைசல் தொடர்பு வைத்திருந்ததாகவும் இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பைசல் வெளிநாடு சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த காதர் முகைதீன் பைசல் வீட்டிற்கு சென்று அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
கத்தியால் குத்திக்கொலை
கடந்த 23.11.2012-ந்தேதி மாலை 5.45 மணி அளவில் அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளிவாசல் அருகில் காஜா முகைதீன் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த காதர்முகைதீன், காஜாமுகைதீனை திட்டி உன் அண்ணன் பைசல் தப்பித்து வெளிநாட்டுக்கு ஓடிவிட்டான். உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறி காஜாமுகைதீனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த காஜா முகைதீனை அக்கம், பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 24.11.2012-ந் தேதி காஜா முகைதீன் இறந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதர் முகைதீனை கைது செய்து பட்டுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பட்டுக்கோட்டை மாவட்ட செசன்சு நீதிபதி டி.வி.மணி, பெண் தகராறில் வாலிபரை கொலை செய்த காதர் முகைதீனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் சுப்பு ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார்.