கும்மிடிப்பூண்டி வாலிபர் கடத்தி கொலை: மேலும் ஒரு பெண் கைது


கும்மிடிப்பூண்டி வாலிபர் கடத்தி கொலை: மேலும் ஒரு பெண் கைது
x

கும்மிடிப்பூண்டி வாலிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

பிணமாக மீட்பு

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தில் நண்பர்களுடன் தங்கி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 28-ந்தேதி முதல் மாரிமுத்து மாயமானார். இது குறித்து மாரிமுத்துவின் சகோதரர் திருமலை (29) அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடிவந்தனர்.

இந்த நிலையில், மாயமான மாரிமுத்து, கடந்த 17-ந்தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் உள்ள கண்மாய் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்.

கைது

மாரிமுத்துவுக்கு முகநூல் மூலமாக பழகி ஆசை காட்டி காதல் வலைவீசிய தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த ராகினி என்பவரிடம் ஏற்பட்ட காதல் போட்டியாலும், பணம் தொடர்பான பிரச்சினையாலும் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியனின் 2-ம் நிலை போலீஸ்காரரான வில்வதுரை (32) தனது நண்பர்களின் உதவியோடு கும்மிடிப்பூண்டியில் இருந்து மாரிமுத்துவை காரில் கடத்தி சென்று சங்கரன் கோவிலில் கொலை செய்து ராஜபாளையம் கண்மாய் பகுதியில் வீசியது தெரியவந்தது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கொலை வழக்காக மாற்றி இதில் தொடர்புடைய போலீஸ்காரர் வில்வதுரை, அவரது நண்பர்களான இசக்கி ராஜா (32), ரவிக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களை தவிர இசக்கி ராஜாவின் மனைவி இளவரசியையும் (29) போலீசார் கைது செய்தனர். ராகினியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story