தாம்பரத்தில் மாமூல் தரமறுத்த வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது


தாம்பரத்தில் மாமூல் தரமறுத்த வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது
x

தாம்பரத்தில் மாமூல் தரமறுத்த வியாபாரியை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 31). இவர், தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலை, காந்தி சாலை சந்திப்பு அருகே மினி வேனில் வெங்காயம், தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் மேற்கு தாம்பரம், குறிஞ்சி நகரைச் சேர்ந்த துளசி (50) என்பவர் மாமூல் கேட்டு மிரட்டினார். ஆனால் கந்தன் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த துளசி, விற்பனைக்கு வைத்திருந்த வெங்காயம், தக்காளிகளை ரோட்டில் வீசி எறிந்ததுடன், மினி வேனில் இருந்த காய் வெட்டும் கத்தியை எடுத்து கந்தனின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் வெட்டினார். மேலும் அவரது சட்டை பையில் இருந்த பணத்தையும் பறித்தார்.

அத்துடன் "எனக்கு மாமூல் தராமல் இங்கு கடை நடத்தக்கூடாது. மீறினால் உன்னை கொலை செய்து விடுவேன்" எனவும் மிரட்டியதாக தெரிகிறது. காயம் அடைந்த கந்தன், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துளசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story