போலி நகையை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது
ஆவடி அருகே போலி நகையை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை மெயின் ரோட்டில் அடகு கடை வைத்திருப்பவர் புகாராஜ் (வயது 49). இவரது கடைக்கு கடந்த 14-ந் தேதி எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் வெங்கடேசன் (34) என்பவர் வந்து 3 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ.75 ஆயிரம் வாங்கிச் சென்றார். அதன் பிறகு புகாராஜ், அந்த நகையை பரிசோதனை செய்து பார்த்தபோது அது போலி நகை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவர் இதுபற்றி போலீசில் புகார் செய்யவில்லை.
நேற்று முன்தினம் புகாராஜ் கடைக்கு மீண்டும் நகையை அடகு வைக்க வெங்கடேசன் வந்தார். இதனால் உஷாரான புகாராஜ், வெங்கடேசனை கையும் களவுமாக பிடித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வெங்கடேசனை கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர், அதே பகுதியில் புகாராஜ் கடை தவிர மேலும் 3 அடகு கடைகளில் தலா 3 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.75 ஆயிரம் பெற்று இருப்பதும் தெரிந்தது. இவ்வாறு 4 அடகு கடைகளில் மொத்தம் ரூ.3 லட்சம் வரை மோசடி செய்திருப்பதும் தெரிந்தது. பின்னர் கைதான வெங்கடேசனை போலீசார் சிறையில் அடைத்தனர்.