வாலிபரை தாக்கி செல்போன்-மோட்டார் சைக்கிளை பறித்தவர் கைது
வாலிபரை தாக்கி செல்போன்-மோட்டார் சைக்கிளை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது 23). இவர் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அருகே வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது தாய் கமலி அவ்வப்போது மது விற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், தங்களை போலீஸ் என்று கூறி மதுபாட்டில் கேட்டதாகவும், மதுபாட்டில் கிடைக்காததால் அவர்களுக்கும், கமலிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதில் கமலியை அவர்கள் திட்டிவிட்டு சென்றனர். இதையறிந்த கமலக்கண்ணன், அவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது 3 பேரும் சேர்ந்து கமலக்கண்ணனை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகநாத் மற்றும் போலீசார் இந்த சம்பவம் பற்றி அறிந்து, 3 பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பிரதாபராமபுரம் தச்சர் தெருவை சேர்ந்த முருகையன் மகன் தேவேந்திரன் (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.