நீலகிரியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றவர் கைது
நீலகிரியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி,
ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட அவலாஞ்சி அணைக்கு செல்லும் நீரோடை மற்றும் அதன் அருகே உள்ள வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தொடர்ந்து நேற்று முன்தினம் நீலகிரி வன அதிகாரி கவுதம், ஊட்டி தெற்கு வனச்சரகர் (பொறுப்பு) சசிகுமார் மற்றும் வனத்துறையினர் இறந்து கிடந்த புலிகளின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
புலிகள் இறந்து கிடந்த பகுதியில் பசு மாடும் இறந்து கிடந்தது. இதனால் புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதற்காக நீலகிரி உதவி வன பாதுகாவலர் (தலைமையிடம்) தேவராஜ் தலைமையில், 20 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் விஷம் வைத்து 2 புலிகளை கொன்றதாக சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த மாட்டின் மீது விஷம் தடவி புலிகளைக் கொன்றதாக அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது மாட்டை புலி அடித்துக் கொன்றதால், கோபமடைந்த அவர், உயிரிழந்த மாட்டின் மீது விஷம் தடவி வைத்ததாக தெரிய வந்துள்ளது.