வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை சேந்தங்குடி ஞானாம்பிகை நகரை சேர்ந்தவர் மூர்த்தி மகன் மணிகண்டன் (வயது 36). இவரது உறவினர் பெண்ணை குத்தாலம் அருகே முருகன்தோட்டம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மகன் அம்ரேஷ் (20) என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் அம்ரேசை கண்டித்தார். இதுகுறித்து அம்ரேஷ் தனது உறவினரான சீர்காழி தாலுகா ஆலவெளி- சேமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த தனபால் மகன் கார்த்திகேயன் (27) என்பவரிடம் தெரிவித்தார். இதனையடுத்து அம்ரேசை அழைத்துக் கொண்டு மணிகண்டன் வீட்டிற்குச்சென்ற கார்த்திகேயன், 'ஏன் அம்ரேசை மிரட்டினாய், காதலிப்பது குற்றமா?' என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திகேயனை குத்தியுள்ளார். இதில் கார்த்திகேயனுக்கு கையில் கத்தி குத்து விழுந்தது. காயம் அடைந்த அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.