'மாமன்னன்' திரைப்படம் திரையிட்டதியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு:எதிர்ப்பு தெரிவித்து போராடிய 46 பேர் கைது
தேனி மாவட்டத்தில் ‘மாமன்னன்' திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்து போராடிய 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
'மாமன்னன்' திரைப்படம்
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத்பாசில் ஆகியோர் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் நேற்று வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரிசெல்வராஜ், தேவர் மகன் திரைப்படம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் இந்த படத்தை தடைவிதிக்க வேண்டும் என்று சில அமைப்புகளை சோந்தவர்கள் வலியுறுத்தினர். போஸ்டர் ஒட்டியும், கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், பரபரப்பான சூழலிலும் 'மாமன்னன்' திரைப்படம் நேற்று வெளியானது.
பலத்த பாதுகாப்பு
தேனி மாவட்டத்தில், பழனிசெட்டிபட்டி, போடி, பண்ணைப்புரம், சின்னமனூர், கம்பம், கூடலூர், பெரியகுளம் ஆகிய இடங்களில் உள்ள 7 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. இதனால், இந்த தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஒவ்வொரு தியேட்டர் முன்பும் அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.
7 இடங்களிலும் மொத்தம் 583 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழனிசெட்டிபட்டியில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
46 பேர் கைது
இந்நிலையில், இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனிசெட்டிபட்டியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்த வந்தனர். தியேட்டர் நோக்கி வந்த அவர்களை பூதிப்புரம் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட இளைஞரணி செயலாளர் சேகர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அதே பகுதியில் மாமன்னன் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய நேதாஜி பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் போடியில் போராட்டம் நடத்திய 14 பேரும், கம்பத்தில் போராட்டம் நடத்திய 13 பேரும் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 46 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், தியேட்டர்களில் இரவு வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.