குழித்துறையில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
குழித்துறையில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.
நாகர்கோவில்:
குழித்துறை தாமிரபரணியாறு மேம்பால பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ரெயில் மோதியதில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் நீல வண்ணத்தில் கட்டம்போட்ட லுங்கியும், வெள்ளை மற்றும் வெளிர்மஞ்சள் கலந்த முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தார்.
கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு காலை சுமார் 10.30 மணி அளவில் அந்த பகுதி வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசாரால் கூறப்படுகிறது. அவர் பெயர், முகவரி எதுவும் தெரியவில்லை. குழித்துறை தாமிரபரணி மேம்பால ரெயில் தண்டவாளத்தை அப்பகுதி மக்கள் கடந்து சென்று வருகிறார்கள். எனவே, இறந்த நபரும் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.