மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை - சுங்க இலாகா விளக்கம்


மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை - சுங்க இலாகா விளக்கம்
x

மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை.அபராதம் வசூலித்து விட்டு நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது என சுங்க இலாகா விளக்கம் அளித்துள்ளது.

சென்னை

மீனம்பாக்கம்,

மலேசிய வாழ் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய போது தனக்கு விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு இருந்தார். அப்பெண்மணி தனது கணவருடன் வந்திறங்கிய போது சென்னை விமான நிலையத்தில் இருந்த சுங்க அதிகாரிகள் தங்கத்தால் செய்த தனது தாலியை கழற்றச் சொன்னதாகவும். அவர் மறுத்ததால் 2 மணி நேரம் அலைக் கழிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலைய சுங்க ஆணையரகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2 வெளிநாட்டு பயணிகளும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் தங்க நகைகளை அணிந்து வெளியேற முற்படுவதை கண்ட சுங்க அதிகாரிகள், அந்த நகைகள் குறித்த விவரங்களை கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர். பெண் பயணியிடம் தாலியை கழற்றுமாறு கூறவில்லை. சுங்க விதிகளை பற்றி விளக்கிய பிறகு அப்பெண்ணின் கணவர் மட்டும் தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மற்றும் காப்பை சோதனைக்கு உட்படுத்த அனுமதித்தார்.

அந்த தங்க நகைகளின் எடை 285 கிராம் (சுமார் 35 பவுன்). அதன் இந்திய மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். அதன் மேல் ரூ.6.5 லட்சம் சுங்க வரியாக செலுத்த வேண்டும் என கணக்கிடப்பட்டது. அந்த சுங்க வரியை கட்டுவதற்கு பயணிகள் மறுத்து விட்டனர். எனவே, அந்த 285 கிராம் கைப்பற்றப்பட்டு, பயணிகளிடம் ரசீது வழங்கப்பட்டது. அந்த நகைகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுங்க சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்திய பின்னர் மலேசியா செல்லும்போது அந்த நகைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story