'மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை அதிகளவில் பயன்படுத்துங்கள்'கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை அதிகளவில் பயன்படுத்துங்கள் என்று கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை பற்றி இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அறியும் வகையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கலந்து கொண்டு கல்லூரி சந்தை நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
வறுமை ஒழிப்பு
பின்னர் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்லூரி சந்தைகள் நடத்துவதன் நோக்கம் பெண்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பான பிரச்சினைகளை கல்லூரி மாணவர்களுக்கு வெளிப்படுத்துதல் மற்றும் கிராமப்புற, நகர்புறங்களில் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மூலம் வறுமை ஒழிப்பின் பல்வேறு பரிமானங்களைப் பற்றிய பயன் உள்ள நுண்ணறிவை வழங்குவதற்காக நடத்தப்படுகிறது. மேலும், சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி, உற்பத்தித்திறன், மதிப்புக் கூட்டல், சந்தைப் படுத்துதல் போன்றவற்றை மேம்படுத்துவதற்காக கல்லூரி மாணவர்கள் மூலம் ஆலோசனை பெறுவதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஆரோக்கியமான உணவு பழக்கம்
கல்லூரி மாணவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டு கல்லூரி சந்தை மூலம் பொருளாதார மேம்பாடு அடைய கருத்துகளை வழங்கிட வேண்டும்.
சுய உதவி குழுவின் தயாரிப்புகளை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தி ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.
இச்செயல்முறையின் மூலம் சுய உதவி குழு பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையவும், உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் கல்லூரி சந்தை மிக நல்ல வாய்ப்பாக அமையும். கல்லூரி மாணவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை அதிகளவில் பயன்படுத்த முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் கோவிந்தராஜீ, கல்லூரி துணை முதல்வர் ஜான் விக்டர் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.