மக்காச்சோளம் விதைப்பு பணிகள் தீவிரம்
மக்காச்சோளம் விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னம்:
மக்காச்சோளம் சாகுபடி
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை என 4 ஒன்றியங்களிலும் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பாசன வசதி கொண்ட இரவை நிலங்களில் ஆடிப்பட்டத்திலேயே மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிடுகின்றனர். மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்து நிலத்தை ஆடி மாதத்திற்கு முன்பே தயார் செய்து மழைக்கேற்ப ஆடி மாத இறுதியிலோ அல்லது ஆவணி மாதம் 2-வது வாரத்திற்குப் பிறகு மக்காச்சோளத்தை விதைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கால சூழ்நிலை, புவி வெப்பமடைதல் உள்ளிட்ட காரணங்களினால் அளவு மற்றும் காலம் மாறி மழை பெய்யும் நிலை உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மாவட்டத்தின் பல ஊர்களில் மக்காச்சோள விதைப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு போதிய மழை இருந்தது போல. இந்த ஆண்டும் பயிருக்கு போதிய அளவிலான மழை இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட மக்காச்சோள ரக விதைக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு ஏற்பட்டு, வழக்கமான விலையை விட கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்ட நிலை இருந்தது. மேலும் ஒரு சில விதைகளின் முளைப்புத்திறன் குறைவாக இருந்ததாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கோரிக்கை
விதைகள் சரியாக முளைக்காவிடில் அதற்கான இழப்பீட்டை பெற்றுத்தர வேளாண் துறை முன்வர வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் படைப்புழுவை சமாளிக்கத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, போதிய மருந்துகளை வேளாண்துறை கைவசம் வைத்திருக்க வேண்டும். உரம், விதைகள், பூச்சி மருத்து உள்ளிட்டவைகளின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் அதற்கேற்றாற்போல விவசாயிகள் விளைவித்து விற்கும் மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு அரசே ஆங்காங்கே நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் செய்வது, தனியார் எடைமேடைகளை கண்காணிப்பது உள்ளிட்டவைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையான உரங்கள் தட்டுப்பாடுன்றி கிடைக்க வழிவகை செய்வதை உறுதிப்படுத்துவதோடு உரம், மருந்து, எடை மேடைகள், கொள்முதல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க பிரத்யேக தொடர்பு எண்களை அறிவிக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.