மக்காச்சோளம் சாகுபடி பணிகள் தீவிரம்
ஆலங்குளம், வெம்பக்கோட்டை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆலங்குளம்,
ஆலங்குளம், வெம்பக்கோட்டை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆலங்குளம்
ஆலங்குளம், தொம்பகுளம், கீழராஜகுலராமன், கொங்கன்குளம், வலையபட்டி, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர் பட்டி, கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், கோபாலபுரம், புளியடிபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, உப்பு பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, நரிக்குளம், முத்துச்சாமிபுரம், குண்டாயிருப்பு, நதிக்குடி, மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மக்காச்சோளம் விதை ஊன்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. செலவும் குறைவு, வேலை ஆட்களின் பயன்பாடும் குறைவு என்பதால் எண்ணற்ற விவசாயிகள் மக்காச்சோளத்தை தான் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.
வெம்பக்கோட்டை
அதேபோல வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி, குகன்பாறை, சிப்பிபாறை, சுப்பிரமணியபுரம், வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, சங்கரபாண்டியாபுரம், தாயில்பட்டி, வெற்றிலையூரணி, சல்வார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோள சாகுபடியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து சல்வார்பட்டி விவசாயி கந்தசாமி கூறியதாவது:-
மக்காச்சோளம் விளைச்சல் சென்ற ஆண்டு அமோகமாக இருந்தது. விலையும் எதிர்பார்த்த அளவில் இருந்ததால் நஷ்டம் ஏற்படவில்லை. ஆகையால் இந்த ஆண்டும் மக்காச்சோளம் பயிரிடும் பணியை தொடங்கியுள்ளோம்.
கூடுதல் சாகுபடி
மழைக்காலம் தொடங்க இருப்பதால் நிலங்களை ஏற்கனவே உழுது தயார் நிலையில் இருந்தது. சென்ற வாரம் சாரல் மழை பெய்ததால் நிலங்களில் வளர்ந்துள்ள களைகளை எடுக்கும் பணி ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு மக்காச்சோளத்தில் நோய் எதுவும் தாக்காததால் இந்த ஆண்டும் மக்காச்சோளத்தை ஆர்வமாக பயிரிட்டுள்ளோம்.
வெம்பக்கோட்டை வேளாண்மை அலுவலகம் மூலம் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் பயிரிடும் முறை, பருவம், குறித்தும் ஏற்கனவே விளக்கி கூறப்பட்டுள்ளது. அதனால் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மக்காச்சோளம் கூடுதலாக சாகுபடி செய்யும் முனைப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.