பராமரிப்பு பணி: குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை - மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை), 25-ந்தேதி மற்றும் 27-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.20683) மாற்றுப்பாதையாக விருதுநகர், ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும்.
மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை), 26-ந்தேதி மற்றும் 28-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20684) தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக தாம்பரம் வந்தடையும்.
மேலும், சென்னை சென்டிரலில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (12689) மாற்றுப்பாதையாக சேலம், ஈரோடு, திருச்சூர், கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து 25-ந்தேதி இரவு 7.35 புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12690) மாற்றுப்பாதையாக திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக சென்னை சென்டிரல் வந்தடையும்.
இதேபோல குருவாயூரில் இருந்து 27-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) மாற்றுப்பாதையாக திருச்சூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். மேலும், மேற்குவங்காள மாநிலம் அவுராவில் இருந்து 26-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12665) மாற்றுப்பாதையாக திருச்சி, கரூர், ஈரோடு, போடனூர், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.