மகேந்திரவாடி ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் பி.பரணிகுமார் கோரிக்கை
மகேந்திரவாடி ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பி.பரணிகுமார் கோரிக்கை வைத்து உள்ளார்.
மகேந்திரவாடி ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பி.பரணிகுமார் கோரிக்கை வைத்து உள்ளார்.
இது குறித்த விவரம் வருமாறு:-
ஊராட்சி மன்றம்
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மகேந்திரவாடி ஊராட்சி மன்றம் உள்ளது. இதில் மகேந்திரவாடி, ஆதிதிராவிடர் காலனி ஆகிய குக்கிராமங்கள் அடங்கி உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த பி.பரணிகுமார் உள்ளார். ஊராட்சியில் செய்யப்பட்டு உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-
மகேந்திரவாடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.10 லட்சத்தில் சிமெண்டு சாலை, மகேந்திரவாடி பட்டம்மாள் தெருவில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்திலும், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.12 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய்கள், மோட்டூர் செல்லும் சுடுகாடு வழிப்பாதையில் ரூ.17 லட்சத்திலும் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மகேந்திரவாடியில் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்திலும், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.2 லட்சத்தில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், பைப்லைன், அதே பகுதியில் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்தில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், பைப்பைன் பழுதுபார்த்தல், எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மகேந்திரவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.3 லட்சத்தில் சிமெண்டு சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மகேந்திரவாடியில் ரூ.7 லட்சத்து 70 ஆயிரத்தில் நெற்களம், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம், திடீர் நகரில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தில் சிமெண்டு சாலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. மேற்கண்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
மருத்துவமுகாம்
மகேந்திரவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்தில் கழிப்பிடம், திடீர் நகரில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், பட்டம்மாள் தெருவில் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்திலும், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்திலும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி, மகேந்திரவாடி கருமான் குட்டை ரூ.11 லட்சத்தில் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
168 பயனாளிகளுக்கு தனிநபர் உறிஞ்சி குழாய் வழங்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஊராட்சியில் 11 ஆயிரம் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. ஊராட்சியில் ஒரு முறை பொது மருத்துவ முகாம், 3 முறை கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு உள்ளது.
விளையாட்டு மைதானம்
மகேந்திரவாடியில் வசிக்கும் மக்கள் அவசர சிகிச்சைக்காக 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல்களத்தூர், புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய சிரமமான நிலையில் இருந்து வருகின்றனர்.
எனவே மக்களின் சிரமத்தை தவிர்க்க மகேந்திரவாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், நேரடி நெல் கொள்முதல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம், ஆதிதிராவிடர் காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை, உடற்பயிற்சி கூடம், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம், திடீர் நகர், மேட்டு தெருவிற்கு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி, மகேந்திரவாடி ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை வைத்து உள்ளேன்.
ஏற்கனவே மகேந்திரவாடியில் இருந்து பனப்பாக்கம் வழியாக காஞ்சீபுரம் வரை சென்று வந்த 158 வழித்தட பஸ் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
சரி செய்யப்படும் குறைகள்
நான் தினமும் காலையில் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் நேரடியாக சென்று வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறைகள் உள்ளதா என்று பார்த்து வருவேன். அப்போது மக்கள் தெரிவிக்கும் குறைகளை பொறுமையாக கேட்டு அதை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து விடுவேன்.
மக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு முன்பாக அந்த குறையை நான் அறிந்து அதை சரிசெய்து கொடுத்து வருகிறேன். வார்டு பகுதிகளில் குப்பைகள் சரியாக அள்ளப்படுகிறதா, குடிநீர் தடையில்லாமல் வழங்கப்படுகிறதா, கழிவுநீர் கால்வாயில் அடைப்புகள் உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறதா என்று பார்த்து ஆய்வு செய்வேன்.
தடையில்லாமல் குடிநீர் கிடைக்க கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் புதிய குழாய்கள் அமைக்கவும், மின் விளக்குகள் இல்லாத பகுதியில் புதிய மின் விளக்குகள் பொருத்தவும், பழுதடைந்த மின் விளக்குகளை உடனுக்குடன் மாற்றவும் நடவடிக்கை எடுத்து உள்ளேன்.
ஒத்துழைப்புடன்....
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகேந்திரவாடி ஊராட்சியை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மையான சிறந்த ஊராட்சியாக மாற்ற நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு, துணை தலைவர் ச.தீனதயாளன், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்பாள் பெருமாள் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆர்.அமுதவள்ளி ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் எஸ்.ராஜி, எஸ்.கமலாஅம்மாள், கே.பூவழகி, ஏ.பழனி, ஜி.முருகேசன், டி.அமரா, சி.தீப்தி, எம்.பிரகாஷ், ஊராட்சி செயலாளர் எம்.ராஜாராமன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு மாற்றுவேன்.
இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் பி.பரணிகுமார் தெரிவித்து உள்ளார்.