கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை மராட்டிய பொதுப்பணித்துறையினர் ஆய்வு
கீழடி மற்றும் கொந்தகையில் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை மராட்டிய பொதுப்பணித்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்ட அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வந்தது. தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கீழடி மற்றும் அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
கொந்தகையில் கடந்த காலங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும், 20-க்கும் மேற்பட்ட மனித முழு உருவ எலும்பு கூடுகளும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது இங்கு 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது முதலில் தோண்டப்பட்ட ஒரு குழயில் 15-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும், 2-வதாக தோண்டிய குழியில் 20-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும் கிடைத்தது. இதுவரை சுமார் 35-தாழிகள் வரை கிடைத்துள்ளது. இதில் சில முதுமக்கள் தாழிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 30-பேர் கொண்ட குழுவினர் திருச்சியில் செயல்படும் பாசன மேலாண்மை பயிற்சி நிலைய உதவி பொறியாளர்கள் பத்மாதேவி, பிரசாந்த், விஜய் ஆகியோர் மூலம் கொந்தகை, கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டனர்.
அவர்களுக்கு தொல்லியில் துறை அலுவலர்கள் காவ்யா, அஜய் ஆகியோர் கீழடி மற்றும் கொந்தகையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் போது கிடைத்த பொருட்கள் குறித்து விவரமாக எடுத்து கூறினர். முன்னதாக இக்குழுவினர் அருங்காட்சியகம் கட்டிடம் பணிகளையும் பார்வையிட்டனர்.