காஞ்சீபுரம், செங்கல்பட்டில் மகா சிவராத்திரி உற்சவம்; சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
மகாசிவராத்திரியையொட்டி காஞ்சீபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிவாலயங்களில் சிவராத்திரி
நாடு முழுவதும் நேற்று மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டதையொட்டி கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் மாநகரில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மகாசிவராத்திரியை புகழ் பெற்ற கைலாசநாதர் திருக்கோவில், கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், முத்தீஸ்வரர், நகரீஸ்வரர், மணிகண்டீஸ்வரர், புண்ணியகோட்டீஸ்வரர், மகாலிங்கேஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், மார்கண்டேஸ்வரர், வேதபுரீஸ்வரர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்களில் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் சிவ,சிவ என கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதில் ஆன்மீக பிரமுகர்கள் ஆர்.வீ.ரஞ்சித்குமார், வாரணவாசி க.மோகனசுந்தரம், வாலாஜாபாத் த.அஜய்குமார், எஸ்.எல்.என்.எஸ்.விஜயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரத்தில் பழமை வாய்ந்த அகோர வீரபத்திர சாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இந்த கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெற்றிலை மாலை சாற்றப்பட்டன. இதுபோல செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் ஊராட்சியில் உள்ள தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில், சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆனந்த வள்ளி உடனுறை சமேத ஆத்தீஸ்வார் கோவில், திருவடிசூலம், செட்டி புண்ணியம், புலிப்பாக்கம், விஞ்சியம் பாக்கம், செங்குன்றம், கொண்ட மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கழுக்குன்றம் மலைமேல் உள்ள வேதகிரீஸ்வர கோவில் மற்றும் தாழக்கோவில் பக்தச் சலேஸ்வரர் கோவிலிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இங்கு 12 மணி நேர நடைபெற்ற தொடர் பரதநாட்டியம் இசை நிகழ்ச்சியை திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கவுன்சிலர் கவிதா மோகன்ராஜ் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார்.