கங்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
ஆரணி சைதாப்பேட்டையில் கங்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆரணி
ஆரணி சைதாப்பேட்டையில் கங்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கங்கை அம்மன் கோவில்
ஆரணி-சைதாப்பேட்டை பகுதியில் பஸ் அதிபர் ஏ.எஸ்.சுப்பிரமணிய முதலியாரால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை அம்மன் கோவில் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தற்போது புதிதாக ராஜ கோபுரத்துடன், கங்கை அம்மன் கோவிலை புதுப்பித்து, குளம் சீரமைத்து, கோவில் வளாகத்திலேயே அமிர்தாம்பிகை சமேத கங்காதீஸ்வரர், மகா கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், அய்யப்பன், வீரஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதி, காலபைரவர், புத்திர காமேஸ்வரி அம்மன், நாகாத்தம்மன் உள்பட பரிவார தெய்வங்கள் புதிதாக அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
கோவில் வெளிவளாகத்தில் மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜைகளை ஷண்முகம் குருக்கள், ராஜப்பா சிவாச்சாரியார் ஆகியோர் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார் கலந்துகொண்டு 5 கால யாக பூஜைகளுடன் நவக்கினி என சொல்ல கூடிய பிரமாண்டமான முறையில் 10 யாக மேடைகள் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சுமார் 1500 கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தினர்.
கும்பாபிஷேகம்
பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை பூதகன வாத்தியங்கள், மங்கள வாத்தியங்களுடன் கோவில் வளம் வந்து ராஜகோபுரம், கருவறை கோபுரம், முகப்பு கோபுரம் மற்றும் பரிவார சன்னதியின் கோபுரங்களுக்கும் விழா குழு தர்மகத்தாவும், பஸ் அதிபர்கள் ஏ.எஸ்.சண்முகம் முதலியார், ஏ.எஸ்.ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.
தொடர்ந்து சாமிகளுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனை நடைபெற்றது. புனிதநீர் தெளிக்கும்போது ஓம் சக்தி மகா சக்தி என கோஷங்கள்எழுப்பி பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர்.
அன்னதானம்
சைதாப்பேட்டை பகுதி முழுவதுமே ஆங்காங்கே விழா குழுவினர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், ஆர்.சிவானந்தம், தயாநிதி, தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, செங்குந்தர் அமைப்பின் நகரத் தலைவர் வி.சிவா, ஒன்றிய குழு தலைவர்கள் கனிமொழி சுந்தர், பச்சையம்மாள் சீனிவாசன், நகரசபை உறுப்பினர்கள் வி.ரவி, பி.பழனி, பாக்கியலட்சுமி வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ், தொழிலதிபர்கள் ஆர்.என்.எஸ்.சேகர், துரை மணிவண்ணன், வேத ராஜன் உள்பட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவீதி உலா
இரவு கங்கை அம்மன் சிம்ம வாகனத்தில் நூதன புஷ்பபல்லக்கில் வாண வேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது நாட்டியஞ்சலியும் நடந்தது.
முன்னதாக நேற்று இரவு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஏ.எஸ்.சண்முகம், முல்லைக்கொடி, ஏ.எஸ்.ரஞ்சித், ஆர்.சரண்யா, விழா குழு தலைவரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான எஸ்.ஜோதிலிங்கம், நிர்வாக குழு செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான ஆ.நடராஜன், நிர்வாக குழு ஆலோசகர் கே.குமரவேல், நிர்வாக குழு பொருளாளரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான எஸ்.கோபால், நிர்வாக குழு துணை தலைவர் கே.ராஜேந்திரன் என்ற பாபு, துணைச் செயலாளர் எம்.பிரகாஷ் மற்றும் திருப்பணி குழுவினர், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.