திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம்


திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம்
x

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருச்சி

மலைக்கோட்டை:

கார்த்திகை தீபத்திருவிழா

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பூர்வாங்க பூஜை செய்து, தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து கொப்பரையில் வைத்து எண்ணெய் ஊற்றும் பணி நடைபெற்றது. இதற்காக 300 மீட்டர் நீளமுள்ள பருத்தி துணியால் பிரமாண்ட திரி தயாரிக்கப்பட்டது.

பின்னர் அதனை தூக்கிச்சென்று கயிறு கட்டி மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகே உள்ள 40 அடி உயரம் கொண்ட இரும்பு கோபுரத்தின் மேலே இருக்கும், 5 அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் வைக்கப்பட்டது. இந்த பிரமாண்ட திரி வைக்கப்பட்ட கொப்பரையில் மொத்தம் 700 லிட்டர் அளவில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவற்றை கலந்து ஊற்றி தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

மகா தீபம்

இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத்திருநாளான நேற்று மாலை 5.30 மணியளவில் தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மையுடன் சிறப்பு அலங்காரத்தில், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள அரச மரத்தடிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்த மலையில் உள்ள கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நின்றார்கள்.

அதை தொடர்ந்து தீபாராதனை செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபத்தை கார்த்திகை தீப கோபுரத்தில் உள்ள திரியில் பற்றவைத்து, மாலை சரியாக 6.03 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

3 நாட்கள் எரியும்

முன்னதாக நேற்று மாலை தாயுமான சுவாமி சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தீபம் ஏற்றப்பட்ட பின் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் மலைக்கோட்டையை சுற்றி உள்ள மற்றும் வெளி வீதிகளில் வலம் வந்தனர். மேலும் நேற்று ஏற்றப்பட்ட இந்த கார்த்திகை தீபமானது தொடர்ந்து 3 நாட்களுக்கு அணையாமல் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை மலைக்கோட்டையை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும்.

வயலூர் முருகன்-சமயபுரம் மாரியம்மன் கோவில்

திருச்சியை அடுத்துள்ள வயலூர் முருகன் கோவிலில் கார்த்திகை திருநாளையொட்டி கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. மதியம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் வள்ளி, தெய்வானை சமேதராக சிங்காரவேலர் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் இடத்தில் எழுந்தருளினார். இதையடுத்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணிய நகரில் உள்ள முருகன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி உற்சவர் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வெள்ளிக் கவச உடையில் அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி தேருக்கு அருகில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மன் தேரோடும் வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பய பக்தியுடன் வணங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

சொக்கப்பனை

மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவில்களாக விளங்கும் இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில், மாகாளிகுடியில் உள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், முக்தீஸ்வரர் கோவில் மற்றும் திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில், காளவாய்பட்டியில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

திருவெறும்பூர், துறையூர்

இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். துறையூரில் பாலக்கரை அருகே பெரிய தெப்பக்குளத்தில் உள்ள சுமார் 4,500 மாடங்களில் தீபமேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தெப்பக்குளத்தின் முன்பாக சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் மாடங்களில் ஏற்றப்பட்ட விளக்குகளாலும், தெப்பக்குளத்தின் நடுமண்டபத்தில் அமைக்கப்பட்ட வண்ண விளக்குகளாலும் தெப்பக்குளம் தீப ஒளியில் ஜொலித்தது. மேலும் அருகே உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர் மற்றும் மஹாசம்பத்கவுரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மாலையில் மாட வீதியில் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் கோவிலின் பிரதான கிழக்கு வாசலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

முசிறி, தா.பேட்டை

முசிறி அண்ணாமலையார் கோவிலில் 108 சங்காபிஷேகமும், யாக வேள்வியும் நடத்தப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அண்ணாமலையார் முன்பு மகா தீபம் ஏற்றப்பட்டது. தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், பிள்ளாதுரை பெரியமாரியம்மன், பகவதி அம்மன், தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி, என்.கருப்பம்பட்டி கிராமத்தில் வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். இதேபோல் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.

12,501 அகல் விளக்குகள்

துவரங்குறிச்சியை அடுத்த பளுவஞ்சியில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் 12,501 அகல் விளக்குகளை சிவலிங்கம், கும்பம் மற்றும் அகல் விளக்கு போன்று வடிவங்களில் ஏற்றி ஒரு லட்சத்து 8 தீப தரிசனம் நடைபெற்றது.

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி சவுந்தரவல்லி தாயார் உடனுறை சோமநாதசுவாமி கோவிலில் நேற்று மாலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.


Next Story