மதுரவாயலில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பலியான சம்பவம் வேதனையை அளிக்கிறது - மக்கள் நீதி மய்யம்
சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சென்னை போரூரைச் சேர்ந்த இன்ஜினியர் ஷோபனா, தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் மொபட்டில் சென்றபோது, மணல் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தகவல் மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்தப் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாக பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது இளம் பெண் உயிரிழந்துவிட்டார். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, மாநிலம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் நேரிடும் விபத்துகளால் ஏராளமானோர் பலத்த காயமடைகின்றனர். சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இனியாவது சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.