ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற மதுரை வாலிபர்
குத்துச்சண்டையில் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற மதுரை வாலிபர்
மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் பாலகுமரன்(வயது 30). இவர் கடந்த 8 வருடங்களாக பாக்சிங், கிக் பாக்சிங், டேக்வாண்டோ போட்டிகளை விளையாடி வருகிறார். இந்தநிலையில், அவர் அடுத்த மாதம் இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பாக்சிங், கிக் பாக்சிங் போட்டிகளில் தேசிய அளவில் பங்கேற்று பல முறை 2-வது பரிசை வென்றிருக்கிறார். இதுபோல், டேக்வாண்டோ போட்டியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கபதக்கங்களை பெற்றிருக்கிறேன். இந்தநிலையில், இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் கலப்பு தற்காப்பு கலை (எம்.எம்.ஏ) என்ற குத்துசண்டை பிரிவில் கலந்து கொள்வதற்கான தகுதி போட்டிகள் கேரளாவில் நடந்தது. இதில், தேர்வாகி அடுத்த மாதம் இந்தோனேசியாவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கிறேன். ஆசிய போட்டியில் 18 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இந்த ஆசிய போட்டிக்கு இந்தியாவில் இருந்து 10 பேர் செல்கிறார்கள். தமிழகத்தில் நானும், கேரளாவில் 2 பேரும், வட மாநிலங்களில் சிலரும் தேர்வாகி இருக்கிறார்கள். ஆசிய போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம் என்றார்.