மதுரை கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி தகராறால் இருதரப்பினர் மோதல்; 3 பேர் காயம்


மதுரை கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி தகராறால் இருதரப்பினர் மோதல்; 3 பேர் காயம்
x

மதுரை கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இரு தரப்பினர் மோதி கொண்டனர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் 30 மோட்டார் சைக்கிள்கள், கார் உடைக்கப்பட்டன.

இருதரப்பினர் மோதல்

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காளமேக பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக வைகாசி பெருந்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை சுவாமி-அம்பாள் சட்டதேரில் பவனி வந்தனர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு மெயின்ரோட்டில் உள்ள கலையரங்கத்தில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது இருதரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

வாகனங்களை நொறுக்கிய கும்பல்

இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்தனர். அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்த வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதில் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் சேதமானது. இதை தடுக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த செந்தில்குமார், செல்வகுமார் உள்பட 3 பேர் மீது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலால் திருமோகூரில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் குவிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சீதாராமன மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏராளமானோர் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாக்குதல் தொடர்பாக 23 பேர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story