மதுரை: மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியில் கழிவுநீர் குழாய் பதிக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டது. அதில் சதிஷ் என்ற தொழிலாளி மண் குவியலுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
தொழிலாளியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டபோது அவரது தலை துண்டானதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரன் என்ற சதீஷ், தனது 2 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மதுரையில் தங்கி பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.5 லட்சமும் நிதி வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் சதீஷ் உயிரிழந்த தகவலை கேட்டு தான் வேதனை அடைந்ததாகவும், சதீஷின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.