ரூ.347 கோடியில் நடந்து வரும் மதுரை ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்


ரூ.347 கோடியில் நடந்து வரும் மதுரை ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்
x

மதுரை ரெயில் நிலையத்தில் விமான நிலையத்துக்கு இணையான தரத்தில் ரூ.347 கோடியில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மதுரை


மதுரை ரெயில் நிலையத்தில் விமான நிலையத்துக்கு இணையான தரத்தில் ரூ.347 கோடியில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி

தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட 9 ரெயில்நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதில், மதுரை ரெயில் நிலையத்திலும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக ரூ.347 கோடியே 47 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகளை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் 3 வருடத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை கண்காணிக்க மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியே 88 லட்சம் நிதி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகளில், ரெயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் தலா ஒரு முனையமும், 3 பன்னடுக்கு வாகன நிறுத்துமிடமும் கட்டப்பட உள்ளன.

இதில் கிழக்கு பகுதியில் 2 வாகன நிறுத்துமிடமும், மேற்கு பகுதியில் உயர்மட்ட பொதுத்தளத்துடன் வருகை மற்றும் புறப்பாடு பயணிகளை பிரிக்கும் வகையிலான வாகன நிறுத்துமிடமும் அமைய உள்ளது. சரக்கு போக்குவரத்துக்காக பிரத்யேக நடைமேம்பாலம், கிழக்கு பகுதியில் வாகன நிறுத்துமிடத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட நடை மேம்பாலம் ஆகியன கட்டப்பட உள்ளன.

சர்வீஸ் ரோடு

ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக சர்வீஸ் ரோடு தனியாக அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே, முதற்கட்டமாக, ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கான கட்டிட அடித்தள பணிகள் முடிந்துள்ளன. ஆர்.எம்.எஸ். ரோட்டில் உள்ள துணை மின்நிலைய கட்டுமான அடித்தள பணிகள் மற்றும் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. ரெயில் நிலைய கட்டுமான பணிகளுக்கான சிமெண்டு கலவை எந்திரம் அமைக்கும் பணி ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் குட்ஷெட் தெருவுக்கு அருகில் நடந்து வந்தது. இந்த பணிகள் முடிந்து சிமெண்டு கலவை தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது. தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆர்.எம்.எஸ். ரோட்டில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்துக்காக, அங்கிருந்த வாகன காப்பகம், ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல், ரெயில் கார்டுகளின் பெட்டிகள் வைக்கும் அறை, போர்ட்டர்கள் ஓய்வு அறை, போக்குவரத்து மேலாண்மை அலுவலகம் ஆகியன இடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

சுரங்கப்பாதை

இதற்காக, கிழக்கு முனைய கட்டிட பகுதி-1 தொடர்புடைய கட்டுமான பணிகள், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட கேபிள் பாதைகளை இடமாற்றும் பணி, குடிநீர், கழிவுநீர் பயன்பாட்டுக்கான குழாய்களை திருப்பிவிடும் பணிகள், பல அடுக்கு இருசக்கர வாகன நிறுத்துமிட கட்டுமானம், ஆர்.எம்.எஸ். அலுவலக தற்காலிக இடத்துக்கான கட்டிட பணி, துணை மின் நிலையத்துக்கான புதைவட கேபிள் பதிக்கும் பணிகள், ரெயில் நிலைய கட்டிடத்துக்கான கட்டிடக்கலை வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளில், ஏற்கனவே நிலப்பரப்பு ஆய்வு, மண் பரிசோதனை உள்ளிட்ட தொடக்க நிலை பணிகள் முடிந்து, திட்ட மேலாண்மை கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கிழக்கு முனைய கட்டிட பகுதி 1 கட்டுமானத்திற்காக ஏற்கனவே உள்ள கழிப்பறை, ஏ.டி.எம். அறைகளை இடிக்கும் பணிகள், மதுரை ரெயில் நிலையம்-பெரியார் பஸ் நிலைய இணைப்புக்கான சுரங்கப்பாதை பணிக்காக ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு கிழக்கு காலனியில் உள்ள பழைய நீர்வழிப்பாதை இடிக்கப்பட்டுள்ளது.


Next Story