மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா
குமார் ஜானகிராமன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட எம்.கிருஷ்ணன், பணிக்காலம் முடியும் முன்பே திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெ.குமார் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இவர் பொறுப்பேற்ற பின்னர் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை மறுநிர்ணயம் செய்தல் போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததாக கூறப்பட்டது.
மேலும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதிலும் சிக்கல்கள் எழுந்தன. இதனால் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது..
இதற்கிடையே துணைவேந்தர் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. நிதி நெருக்கடி மிகுந்த சூழலில் உடல்நலக்குறைவாலும் அவதிப்பட்டு வரும் குமார், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இன்னும் 11 மாத பணிக்காலம் உள்ள சூழலில், அவரது இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ராஜினாமா கடிதத்தின் மீதான பதிலை கவர்னர் ஆர்.என்.ரவி ஓரிரு நாளில் அறிவிப்பார் என்று தெரிகிறது.