மதுரை மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,500 ஆக குறைவு - விறுவிறு விற்பனை


மதுரை மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,500 ஆக குறைவு - விறுவிறு விற்பனை
x

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று குறைந்துள்ளதால் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

மதுரை,

மதுரை மல்லிகைப்பூவிற்கு எப்போதும் தனி மவுசு உண்டு. திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் அதனுடைய விலை உச்சத்தை தொடும். மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. விற்பனைக்கு போக, மீதமுள்ள பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கிடையே, பனிபொழிவு காரணமாக மல்லிகைப்பூக்களின் விலை ரூ.2 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது. இந்த நிலையில், இன்றும், நாளையும் முகூர்த்த தினமாக இருக்கிறது. இதனால், நேற்று காலை நேரத்தில் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மல்லிகைப்பூவானது ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூவின் விலை நேற்றை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்கப்பட்டது. பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலையும் நேற்றை விட இன்று சற்று குறைந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.1 ஆயிரத்து 800-ஆக விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,500 ஆக குறைந்தது. ரூ.1,900-க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ இன்று ரூ.1,500-க்கு விற்கப்பட்டது.

ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1,500-க்கும், ஜாதிப்பூ ரூ.1,200-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், பட்டன்ரோஸ் ரூ.250-க்கும், செவ்வந்தி, பன்னீர் ரோஸ் மற்றும் அரளிப்பூ ரூ.150-க்கும், ரோஜா ரூ.130-க்கும், மரிக்கொழுந்து ரூ.120-க்கும், வாடாமல்லி ரூ.60-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை இன்று குறைந்து காணப்பட்டதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

நாளை மறுநாள் திருக்கார்த்திகை என்பதால் பூக்களின் விலை நாளை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story