நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தரக் கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
நெல் மூட்டைகள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை,
அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தரக் கோரி வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டில் பருவமழை நன்றாக பெய்ததால், நல்ல விளைச்சல் ஏற்பட்டு விவசாயிகள் அறுவடைக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கு போதிய பாதுகாப்பு மையங்கள் இல்லை.
இதனால் நெல் மணிகள் வெயிலில், மழையிலும் வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக நெல் சேமிப்பு கிடங்குகள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், பல்வேறு மாவட்டங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை செய்திகளில் பார்த்து வருவதாகவும், இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.