மதுரை மாநகராட்சி மேயர், அதிகாரிகள் ஆய்வு


மதுரை மாநகராட்சி மேயர், அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 1 Sept 2023 1:15 AM IST (Updated: 1 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாற்றில் இருந்து குடிநீர் திட்ட பணிகளை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு ரூ.1,296 கோடியில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தேனி மாவட்டம் கூடலூர் குருவனூத்து பாலம் வண்ணான்துறை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இங்கு இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பண்ணைப்பட்டி பகுதி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் ஆணையர் பிரவீன்குமார், செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி மற்றும் அதிகாரிகள் கூடலூர் குருவனூத்து பாலம் பகுதிக்கு வந்தனர். முல்லைப்பெரியாற்று பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் கூறுகையில், பணிகள் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை சரிவர நடைபெறவில்லை. இனிமேல் வாரத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட பணிகளை செய்து முடிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை மாநகராட்சி பொறியாளர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


Next Story