மதுரை சித்திரை திருவிழா: அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை - இன்று நடக்கிறது
வைகை ஆற்றில் இறங்குவதற்காக நேற்று மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் காலை வெகுவிமரிசையாக நடந்தது.
நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் அதிகாலையில் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து கீழமாசி வீதியில் உள்ள தேரடி மண்டபத்திற்கு வந்தனர். அங்கு உள்ள கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர். சிறிய தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.
தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர். காலை 6.33 மணிக்கு பக்தர்கள் "ஹரகர சுந்தர மகாதேவா" என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் இருந்த பெரிய தேர் நகர்ந்தது. சிறிது நேரம் கழித்து 6.50 மணிக்கு மீனாட்சி அமர்ந்திருந்த சிறிய தேர் புறப்பட்டது.
தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. பெரியதேர் மதியம் 12.35 மணிக்கு நிலையை அடைந்தது. அதேபோல சிறியதேர் 12.55 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து நேற்று இரவு தேர்ச்சக்கரம் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் ஒரே சப்பரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இந்த ஒரு நாளில் மட்டும்தான். எனவே இதை பக்தர்கள் குடும்பம்-குடும்பமாக கண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிகர நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
மாலை 6 மணி அளவில் அங்குள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 6.50 மணி அளவில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றி பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேள, தாளம் முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
இன்று (4-ந்தேதி) மூன்று மாவடியில், மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் அவர், இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைகிறார். விடிய, விடிய அழகருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடக்கிறது.
இதைத் தொடர்ந்து நாளை (வௌ்ளிக்கிழமை) அதிகாலையில் 5.45 மணிக்கு கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அப்போது பல லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து மும்முரமாக செய்துவருகிறார்கள். கள்ளழகர் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.