மக்களோடு மக்களாக நடைபயிற்சி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மக்களோடு மக்களாக நடைபயிற்சி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்த ‘ஹேப்பி ஸ்டிரீட்ஸ்’ நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களோடு மக்களாக நடைபயிற்சி மேற்கொண்டார். மேலும் கூடைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடியும் அசத்தினார்.

'ஹேப்பி ஸ்டிரீட்ஸ்' நிகழ்ச்சி

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக விளங்கும் அண்ணா நகரில் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், குழந்தைகளுடன், பெற்றோர் வெளியே விளையாடி மகிழ்ந்து களிப்படைவதை ஊக்குவிக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஹேப்பி ஸ்டிரீட்ஸ்' (மகிழ்ச்சியான தெருக்கள்) நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் அண்ணா நகரின் முக்கிய சாலைகளில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படும். சாலைகளில் பொதுமக்கள் விளையாடலாம். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடலாம். உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதன்படி அண்ணா நகரில் நேற்று 'ஹேப்பி ஸ்டிரீட்ஸ்' நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரை கண்டதும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். பலர் அவரிடம் நலம் விசாரித்தனர்.

விளையாடி மகிழ்ந்த மு.க.ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில் சிறுவர்-சிறுமிகள் மேற்கொண்ட ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டு பயிற்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வியந்து பார்த்தார். அதனைத்தொடர்ந்து சென்னை தினத்தையொட்டி பாரம்பரிய சின்னங்கள் பின்னணியில் 'மெட்ராஸ்' என்ற எழுத்துகள் வடிவமைக்கப்பட்டிருப்பதை பார்த்து ரசித்தார். சென்னை தினத்தை மக்களுடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

பின்னர் மக்களுடன் மக்களாக சாலையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பலர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஒரு இடத்தில் கூடைபயிற்சியில் சிலர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களிடம் பந்தை பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் கூடையை நோக்கி பந்தை எறிந்தார். 4-வது முயற்சியில் பந்து கூடைக்குள் விழுந்தது. பின்னர் இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் பங்கேற்று விளையாடினார். பின்னர் சிறிது தூரம் சைக்கிள் ஓட்டிய பிறகு, மீண்டும் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

'நோய்களில் இருந்து விடுபடலாம்'

'சாப்பிட பசியோடு போய் உட்கார வேண்டும், பசியோடு எழுந்து வந்துவிட வேண்டும், இதுதான் வாழ்க்கைமுறை' என்று கவிஞர் வைரமுத்து அழகான கவிதை சொல்வார். எனவே வயிறுமுட்ட சாப்பிடக்கூடாது. அதற்காக சாப்பிடாமலும் இருந்துவிடக்கூடாது. என்ன சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடல்நலத்தை பேணி பாதுகாத்து கொண்டிருந்தால், எந்த நோய் வந்தாலும், எந்த கவலைகள் வந்தாலும், எந்த டென்ஷன் வந்தாலும் அதில் இருந்து நாம் சுலபமாக விடுபட்டு விடலாம். ஆகவே, அந்த நல்ல எண்ணத்தோடுதான் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஏதோ ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும், சைக்கிள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்துதான் வந்தேன்.

உடல்நலமும், மனநலமும்...

ஆனால் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் அதிக ஆர்வத்தோடு வந்திருக்கிறார்கள். இங்கு கிராமப்புற கலைநிகழ்ச்சிகள், மயிலாட்டம், இறகுப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், சைக்கிள் பயிற்சி என்று பல பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்ற 'மகிழ்ச்சியான தெருக்கள்' நிகழ்ச்சி அனைத்து பகுதிகளிலும் நடைபெற வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, உடல்நலம் மற்றும் மனநலமும் பாதுகாக்கப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது, உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். இதை இன்றோடு விட்டுவிடாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, தினசரி என்று கூட நான் சொல்லவில்லை, தினசரி உடற்பயிற்சி செய்தால் மிகச்சிறப்பு. ஆனால், சிலருக்கு அந்த வாய்ப்பு கிடையாது. பலர் அலுவலகங்களில் பணியாற்றி கொண்டிருப்பீர்கள், பல பணிகள் இருக்கும். அதனால், வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் அதை நீங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

'என்னையும், உதயநிதியையும் அண்ணன்-தம்பி என்பார்கள்' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகம்

சென்னை அண்ணாநகரில் நடந்த 'ஹேப்பி ஸ்டிரீட்ஸ்' நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கொரோனா தொற்றில் இருந்து நான் வேகமாக குணமடைந்ததற்கு காரணம் எனது உடல்நல பராமரிப்புதான். எனக்கு வயது 69, கிட்டத்தட்ட 70 வயது. ஆனால் நானும், என்னுடைய மகன் உதயநிதியும் எங்கேயாவது வெளியூர் சென்றால் 'நீங்கள் அண்ணன், தம்பிகளா?' என்று கேட்பார்கள். நான் இதை பெருமைக்காக சொல்லவில்லை, பல நேரங்களில் இது நடந்ததுண்டு. வெளிநாடுகளுக்கு சென்றபோது அது மாதிரி பல முறை நடந்ததுண்டு. எதற்காக சொல்கிறேன் என்றால், அந்த மாதிரி நான் என்னுடைய உடல்நலத்தை பேணி காப்பதில் அக்கறை எடுத்து கொள்வேன்.

நான் காலையில் ஒரு மணி நேரம் 'ஜிம்'மில் உடற்பயிற்சி செய்கிறேன். அடுத்த நாள் காலையில் ஒரு மணி நேரம் யோகா செய்கிறேன். மாலையில் ஒரு மணி நேரம் 5 கி.மீ. நடக்கிறேன். இதை நாள்தோறும் என்னால் செய்ய இயலவில்லை. காரணம், நான் எப்படிப்பட்ட பொறுப்பில் இருக்கிறேன்? என்பது உங்களுக்கு தெரியும். வெளியூர்களுக்கு சென்றாலும் வாய்ப்பு கிடைக்கும்போது முடிந்த அளவு உடற்பயிற்சி செய்துவிடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story