சென்னை அடையாறில் கோர விபத்து: லாரி மோதி கல்லூரி மாணவி தலை துண்டாகி பலி - கணவர் கண் எதிரே சோகம்
சென்னை அடையாறில் லாரி மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே கல்லூரி மாணவி தலை துண்டாகி பலியானார்.
சென்னை தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு. அவரது மனைவி ஹேமலதா (வயது 25). இவர் கிண்டியில் உள்ள செல்லம்மாள் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. படிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக ஹேமலதா கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார்.
அவரது கணவரும் மனைவியின் படிப்புக்கு உற்ற துணையாக இருக்கும் வகையில் ஹேமலதாவுக்கு மிகுந்த நம்பிக்கையாக இருந்து வந்தார். ஹேமலதாவை தினந்தோறும் ரகு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கல்லூரிக்கு செல்வார்.
இந்தநிலையில், நேற்று காலை வழக்கம் போல ரகு தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தார். காலை 8.45 மணியளவில் அடையாறு பகுதியில் மிகக்குறுகிய சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவான்மியூரில் இருந்து அடையாறு நோக்கி சிமெண்டு கலவை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி ரகு மற்றும் ஹேமலதா ஆகியோர் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் வேகமாக மோதியது.
இதில், நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்த ரகு சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்டார். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த ஹேமலதா சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த டிப்பர் லாரி ஹேமலதாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஹேமலதா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அவரது கணவர் சாலையின் ஓரத்தில் விழுந்ததால் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஹேமலதா தனது கண்முன் துடிதுடித்து இறந்ததை பார்த்து ரகு கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைக்கும் விதமாக இருந்தது.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரகுவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் ஹேமலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவா் ஆசாத் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பின்படி, கனரக வாகனங்கள் காலை 7 மணி வரை மட்டும்தான் நகரின் உட்புறம் வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விபத்து நடந்த அடையாறு உள்பட பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்கள் விதிமுறைகளை மீறி தங்களது விருப்பம் போல எப்போதும் வந்து போய் கொண்டிருக்கிறது. அப்படி விதிகளுக்கு முரணாக நேற்று கனரக வாகனம் நகரின் உட்புறம் வந்ததால் அப்பாவி பெண்ணின் உயிர் பறிபோயிருக்கிறது என்று அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சட்டத்துக்கு புறம்பாகவும், அதிக வேகத்தில் தாறுமாறாகவும், விதிமுறைகளை மீறியும் வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.