ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவி


ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவி
x

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

ஹார்மோன் பகுப்பாய்வு கருவி

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக

இந்தியாவிலேயே முதல்முறையாக கடந்த 1965-ம் ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை துறை பட்ட மேற்படிப்பு சென்னை மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டது. இன்று வரை 236 மாணவர்கள் இங்கு பயின்று இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிறப்பாக பயின்று வருகின்றனர். அவசர சிகிச்சைப்பிரிவு 24 மணி நேரமும் அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 3,600 வெளிநோயாளிகள், 300 உள்நோயாளிகள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். வெளிநோயாளிகள் பிரிவில் அல்ட்ரா ஸ்கேன், சிறுநீர் தாரை விரிவுபடுத்துதல், 'யூரோபுளோமெற்றி', 'யூரோடைனமிக்' பரிசோதனை, சிஸ்டோஸ்கோபி போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

மேலும் கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சிறுநீரக கல் உடைக்கும் கருவி இங்கு நிறுவப்பட்டு, இதுவரை 14 ஆயிரத்து 882 பயனாளிகள் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.4.5 கோடி செலவில்...

இந்தநிலையில் சிறுநீரக அறுவை சிகிச்சை துறையில் ரூ.4.5 கோடி செலவில் நவீன உபகரணங்களும், முழு உடல் பரிசோதனை மையத்தில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவியும் தற்போது திறந்து வைக்கப்பட்டது. மேலும் ரூ.76 லட்சம் செலவில், நாற்பரிமாண எக்கோ கருவியும் திறந்து வைக்கப்பட்டது. இந்த கருவி இதயத்தில் உள்ள திசுக்களான வால்வுகள், இதயசுவர் தடுப்பான்களை துல்லியமாகவும் முப்பரிமாண வடிவில் பரிசோதனை செய்யும் திறன் மிக்கது. இதனிடையே மக்கள் பயனடையும் வகையில் ரூ.51 லட்சம் செலவில் 'இண்டிராவாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட்' கருவி திறந்து வைக்கப்பட்டது. இந்த கருவி அலட்ரா சவுண்ட் மூலம் இதய ரத்தக்குழாயின் உட்புகுந்து, ரத்தக்குழாய் சுவரின் மூவடுக்கு அமைப்பு மற்றும் அதில் ஏற்படும் பாதிப்பு குறித்து துல்லியமாக தெரிவிக்கும் திறன் பெற்றது.

இதன் மூலம் 'ஸ்டென்ட்' அடைப்புக்கான காரணங்களை கண்டறிவதோடு, இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்கும் 'ஸ்டென்ட்'டை துல்லியமாக பொருத்த முடியும்.

3 நிழற்குடைகள்

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.13 லட்சத்து 15 ஆயிரம் செலவில் 3 நிழற்குடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ.15 லட்சம் செலவில் ரத்த குழாய் வீக்கம், அவசர நுண்துளை அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை ரத்த குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் இங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் தேரணிராஜன் மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.


Next Story