சினிமாவில் வருவது போல காமராஜர் சாலையில் அணிவகுத்து வந்த சொகுசு கார்களுக்கு அபராதம்
சினிமாவில் வருவது போல காமராஜர் சாலையில் அணிவகுத்து வந்த சொகுசு கார்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாலம் வழியாக நேற்று காலை ஏராளமான விலை உயர்ந்த சொகுசு கார்கள் வரிசையாக சினிமாவில் வருவது போல அணிவகுத்து வந்தன. தனியார் நிறுவன விளம்பரத்துக்காக அவ்வாறு அணிவகுத்து வந்ததாக தெரிகிறது. வேகமாக வந்த இந்த கார்களை பார்த்து மற்ற வாகன ஓட்டிகள், அசந்து போய் போக்குவரத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அணிவகுத்து வந்த கார்களை போக்குவரத்து போலீசார் மடக்கி சோதனை போட்டனர். காரை ஓட்டிவந்த டிரைவர்களுக்கு மது போதையில் இருக்கிறார்களா?, என்று சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அந்த கார்களின் நம்பர் பிளேட்டுகள் மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளுக்கு புறம்பாக இருப்பதாகவும், அதிக ஒலி எழுப்பியதாகவும் குற்றம் சாட்டி, மொத்தம் 8 கார்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
அதன்படி 4 கார்களுக்கு தலா ரூ.2,500 வீதமும், 3 கார்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதமும், ஒரு காருக்கு ரூ.1,500-ம் என மொத்தம் ரூ.17,500-க்கு அபராத தொகைக்கான சலான் வழங்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த கார்களின் அழகை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அவற்றுடன் நின்று செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.