கரூரில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கரூரில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
கரூர் ரெயில்வே ஜங்ஷன் அருகே மாரியம்மன் பூ மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர். இந்த பூ மார்க்கெட்டிற்கு மாயனூர், மலைப்பட்டி, கருப்பூர், லந்தக்கோட்டை, செக்கணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை பறித்து கொண்டு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி ஜாதி பூ உள்ளிட்ட பூக்களை இங்கிருந்து வியாபாரிகள், பூக்கட்டும் பெண்கள் உள்ளிட்டோர் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் ஆடிப்பெருக்கு இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் இறைவழிபாட்டில் பூக்களின் தேவை முக்கிய பங்காக இருக்கும். அந்தவகையில் தங்களுக்கு தேவையான பூக்களை ஏலம் மூலம் வாங்கி செல்ல பொதுமக்கள், வியாபாரிகள், பூ கட்டி விற்கும் பெண்கள் உள்ளிட்டோர் நேற்று பூ மார்க்கெட்டில் தங்களுக்கு தேவையான பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
மல்லிகை பூ ரூ.1000
ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.800 முதல் ரூ.1000-க்கும், முல்லை பூ ரூ.400 முதல் ரூ.450-க்கும், செவ்வந்தி பூ ரூ.250-க்கும், அரளி பூ ரூ.250-க்கும், ரோஜா பூ ரூ.300-க்கும், சம்மங்கி பூ ரூ.250-க்கும், மருவு 4 கட்டு ரூ.100-க்கும், துளசி 4 கட்டு ரூ.60-க்கும், மரிக்கொழுந்து 1 கட்டு ரூ.70-க்கும் விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் கடந்த வாரங்களில் வெள்ளிக்கிழமைகளில் மல்லிகை பூ ரூ.500-க்கும், மற்ற நாட்களில் அதைவிட குறைவாகவும் மல்லிகை பூ விற்பனையானது. தற்போது ஆடிப்பெருக்கை முன்னிட்டு ரூ.1000-க்கு மல்லிகை பூ விற்பனையாகிறது. என்றனர்.