குடும்பத்தை நிலைகுலைய வைத்த ஆன்லைன் சூதாட்டம்.. மகனை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற விமானப்படை ஊழியர்


குடும்பத்தை நிலைகுலைய வைத்த ஆன்லைன் சூதாட்டம்.. மகனை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற விமானப்படை ஊழியர்
x

சைதன்யா, பத்ரி

கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்ததால் கடனை அடைக்க முடியாமல் சைதன்யா திணறியிருக்கிறார்.

சென்னை:

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சைதன்யா (வயது 33) என்பவர், சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் பார்வதி நகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் சைதன்யா தனது மூத்த மகன் பத்ரியின் (வயது 8) கழுத்தை நெரித்தும், தூக்கில் தொங்கவிட்டும் கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அவர், தற்கொலை செய்து கொள்வதற்காக மெரினா கடற்கரைக்கு சென்றார்.

மற்றொரு அறையில் இளைய மகன் கவுசிக்குடன் (வயது 4) தூங்கிக்கொண்டிருந்த மனைவி வைதேகி, நடந்த சம்பவத்தை கவனிக்கவில்லை. மெரினாவுக்கு சென்ற சைதன்யா, அங்கிருந்து செல்போனில் தனது நண்பரை தொடர்புகொண்டு, "என் மகனை கொன்றுவிட்டேன். நானும் சாகப்போகிறேன். என் மனைவிக்கு உதவி செய்யுங்கள்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர், இதுபற்றி சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் மெரினா கடற்கரையில் உள்ள ரோந்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மெரினா கடற்கரை போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கடற்கரையில் பதற்றத்துடன் நின்ற சைதன்யாவை தடுத்து பத்திரமாக மீட்டனர். விசாரணையில் அவர், மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில் சேலையூர் போலீசார், சைதன்யாவின் வீட்டுக்கு சென்று அவரது மனைவி வைதேகியிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் நடந்த சம்பவம் வைதேகிக்கு தெரியவந்தது. அடுத்த அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய மகனின் உடலை பார்த்து வைதேகி கதறி அழுதார். போலீசார் பத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சேலையூர் போலீசார், மீட்கப்பட்ட சைதன்யாவை கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று மகனை கொன்று தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் சைதன்யா அதிகளவில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலரிடம் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் தனது சொத்துக்கள் முழுவதையும் விற்றும், கடனை அடைக்க முடியவில்லை. மாதம் ரூ.42 ஆயிரம் சம்பளம் வாங்கும் சைதன்யாவுக்கு மாதம் திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை மட்டுமே ரூ.50 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

கடன் தொல்லை காரணமாக பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துவிட்டு சொந்த ஊருக்கு சென்ற சைதன்யா, நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 20-ந் தேதி மீண்டும் சேலையூர் வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்ததால் கடனை அடைக்க முடியாமல் திணறிய சைதன்யா, தான் உயிரை இழந்து விட்டால் அந்த வேலை மனைவிக்கு கிடைக்கும். இளைய மகனை அந்த பணத்தில் அவர் காப்பாற்றி கொள்வார் என திட்டமிட்டு மூத்த மகனை கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

மேலும் சைதன்யா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர், "என் மூத்த மகன் பத்ரி என் மீது அதிக பாசம் வைத்திருப்பான். நானும் அவன் மீது அதிக பாசம் வைத்துள்ளேன். என்னை பிரிந்து பத்ரி தனியாக வாழ மாட்டான். அதனால் என்னுடன் அவனை அழைத்து செல்கிறேன். என் மனைவி 2-வது திருமணம் செய்து கொண்டு மகன் கவுசிக்கை நல்லபடியாக பார்த்து கொள்ள வேண்டும்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பமே நிலைகுலைந்துள்ளது. சைதன்யா ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தாரா? அவருக்கு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story