ஓமலூர் கோர்ட்டு முன்பு லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்


ஓமலூர் கோர்ட்டு முன்பு லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2023 1:00 AM IST (Updated: 1 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

ஓமலூர்:-

போலீசார் பறிமுதல் செய்த வாகன ஆவணங்களை தரக்கோரி, ஓமலூர் கோர்ட்டு முன்பு லாரி உரிமையாளர்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.

குடிபோதையில் லாரியை ஓட்டினர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 37), தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் கோவில்பட்டி வட்டார செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமான லாரியில், கடந்த 19-ந் தேதி டெல்லியில் இருந்து ஈரோட்டுக்கு பருத்திக்கழிவு பாரம் ஏற்றிக்கொண்டு வரப்பட்டது. லாரியில், சாத்தூரை சேர்ந்த பாலு (40), தஞ்சாவூரை சேர்ந்த மாரியப்பன்(44) ஆகியோர் டிரைவர்களாக வந்தனர்.

இவர்கள் வரும் வழியில் பல்வேறு மதுக்கடைகளில் லாரியை நிறுத்தி மது அருந்திய படியே வாகனம் ஓட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் ஜி.பி.எஸ். கருவி மூலம் லாரி நிறுத்தப்படும் இடங்களை கண்காணித்த கணேஷ்குமார், கடைசியாக நேற்று முன்தினம் மதியம் தொப்பூர் கணவாய் பகுதியில் வரும் போது டிரைவர்கள் மது போதையில் வண்டியை ஓட்டி வருவது குறித்து சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

லாரி உரிமையாளர்கள் திடீர் போராட்டம்

இதையடுத்து லாரியை மடக்கி பிடித்த தீவட்டிப்பட்டி போலீசார், குடிபோதையில் வண்டியை ஓட்டிய டிரைவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் லாரியை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். டிரைவர்களிடம் இருந்து லாரிக்குரிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த கணேஷ்குமாரிடம், குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கான அபராத தொகையை செலுத்தி விட்டு லாரியை எடுத்து செல்லுமாறு தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் கூறி உள்ளார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த கணேஷ்குமார், நான் தான் குடிபோதையில் டிரைவர்கள் லாரியை ஓட்டி வருவதாக போலீசாரிடம் கூறி வண்டியை நிறுத்தி வைக்க சொன்னேன். ஆனால் டிரைவர்களை விடுவித்து விட்டு என்னிடமே அபராதம் வசூலிக்க கூடாது என்று கூறினார். இருப்பினும் லாரிக்குரிய ஆவணங்களை தர மறுமுடியாது என போலீசார் மறுத்ததால் கணேஷ்குமார், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளான லாரி உரிமையாளர்கள் 4 பேருடன், ஓமலூர் கோர்ட்டு நுழைவு வாசல் முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவை சந்தித்து மனு கொடுக்க அங்கிருந்து சென்றனர்.

இந்த சம்பவம் ஓமலூர் கோர்ட்டு வளாகத்தில் திடீரென பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story