சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்


சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
x

சுங்கக்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனை கண்டித்து சுங்கச்சாவடிகளில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுங்கக்கட்டணம் உயர்வு

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.95-க்கு பதிலாக நேற்று முதல் ரூ.5 உயர்ந்து புதிய கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது.

மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.155 வசூலித்த நிலையில் தற்போது ரூ.10 உயர்ந்து ரூ.165 புதிய கட்டணமாகவும், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.325-லிருந்து ரூ.20 உயர்ந்து புதிய கட்டணமாக ரூ.345 உயர்ந்துள்ளது.

கனரக பெரிய வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.510-லிருந்து ரூ.30 உயர்ந்து ரூ.540 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டண உயர்வு அமல்

நாட்டில் உள்ள 566 சுங்கச்சாவடிகளில் 460 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி சுங்கச்சாவடி, திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் சந்திப்பில் உள்ள கோவளம் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இந்த கட்டண உயர்வு அமலாகியுள்ளது.

சென்னை அக்கரை-மாமல்லபுரம் இடையே கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.47, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.70, ஒரேநாளில் பல முறை பயணம் செய்ய ரூ.128, மாதாந்திர கட்டணம் ரூ.2,721. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்ய ரூ.75, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.118 கட்டணம். பஸ், சரக்கு வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.157, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.236 கட்டணம். 3 சக்கர வர்த்தக வாகனங்கள் ஒரு முறை பயணம் செய்ய ரூ.172, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.238 கட்டணம். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.247, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.370 கட்டணம். கனரக கட்டுமான வாகனங்கள் மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.301, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.451 கட்டணம். உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.240 ஆகும். பள்ளி பஸ்களுக்கு மாத கட்டணம் ரூ.1,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வானகரத்தில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு, சென்னை வானகரம், திண்டிவனம்-ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர், நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புதூர், பள்ளிக்கொண்டா, பரனூர், பட்டரை பெரும்புதூர், புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சுங்கக்கட்டண உயர்வால் லாரி, வேன் போன்ற சரக்கு வாகன கட்டணங்களும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பிலும், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் தலைமையிலும் சென்னையை அடுத்த வானகரம் சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வாகன ஓட்டிகளும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

மாநிலம் முழுவதும்...

மாநிலம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கருப்பூரில் நடந்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர், சுங்கக்கட்டண உயர்வை பஞ்சாப் அரசு தள்ளுபடி செய்துள்ளது. தமிழக அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புத்துக்கோவில் பகுதியில் நடந்த போராட்டத்தில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் தலைவர் சண்முகப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதேபோல் தூத்துக்குடி வாகைக்குளம், கோவை கணியூர், திண்டுக்கல் கொடை ரோடு, ஈரோடு விஜயமங்கலம், திருச்சி சமயபுரம், துவாகுடி, நாமக்கல் கீரம்பூர், தர்மபுரி தொப்பூர், வேலூர் பள்ளிகொண்டா, கிருஷ்ணகிரி ஆகிய சுங்கச்சாவடிகளிலும் போராட்டம் நடந்தது.


Next Story