அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சமூக நீதியை சூறையாடுவதா? ராமதாஸ் கண்டனம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சமூக நீதியை சூறையாடுவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையின்போது பல கல்லூரிகளில், நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது கவலையளிக்கிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் சமூகநீதி சூறையாடப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது; அது கண்டிக்கத்தக்கது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் அறியாமையில் செயல்படுகிறார்களா? அல்லது அச்சத்தில் செயல்படுகிறார்களா? என்பது தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதில் சமூக அநீதி இழைக்கப்படுவதை உயர்கல்வித்துறை அனுமதிக்கக்கூடாது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத இடங்கள் முதலில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு மீதமிருந்தால் மட்டுமே பிற வகுப்பினருக்கு ஒதுக்கப்படுவதை உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும். நிரம்பாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்புவதில் சமூகநீதியை பலி கொடுக்கக்கூடாது. இதுதொடர்பாக அரசு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சமூகநீதியை காப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பா.ம.க. மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.