புதிய ஆதார் அட்டை எடுக்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை
சிவகாசியில் புதிய ஆதார் அட்டை எடுக்க பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் புதிய ஆதார் அட்டை எடுக்க பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆதார் மையம்
சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதிய ஆதார் அட்டை பதிவு மற்றும் திருத்தம் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் தாலுகாவின் பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்களும் காலை 9 மணிக்கே இங்குள்ள ஆதார் மையத்துக்கு வந்து காத்திருக்கிறார்கள்.
இந்த ஆதார் மைய பணியில் ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டுமே இருக்கிறார். இதனால் ஆதார் மைய பணிகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பல நேரங்களில் ஆதார் அட்டை பதிவு செய்ய 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கூடுதல் பணியாளர்கள்
இந்த ஆதார் மையத்துக்கு வரும் பொது மக்கள் அமர போதிய இடவசதியும், இருக்கை வசதியும் இல்லாத நிலையில் நுழைவு வாயில் பகுதியில் தான் பொதுமக்கள் அமர வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருத்து ஆதார் சேவையை பெற வேண்டிய நிலையில் அங்கு போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் தொலைதூரத்தில் இருந்து வரும் பெண்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.
இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் அரசின் பல்வேறு சலுகைகளை பெற மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை இருப்பதால் தற்போது அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆதார் மையத்தில் குவிந்து வருகிறார்கள். இவர்களுக்கு விரைவில் ஆதார் சேவைகளை செய்து கொடுக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.