தர்மபுரி மாவட்டத்தில்மக்கள் நீதிமன்றத்தில் 873 வழக்குகளுக்கு சமரச தீர்வு


தர்மபுரி மாவட்டத்தில்மக்கள் நீதிமன்றத்தில் 873 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 9 July 2023 12:30 AM IST (Updated: 9 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 873 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியும், சிறப்பு மக்கள் நீதிமன்றம் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மோனிகா, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சுரேஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தர்ராஜன், கூடுதல் மகளிர் நீதிபதி மதுவர்ஷினி மற்றும் நீதிபதிகள் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

ரூ.8 கோடியே 73 லட்சம் தொகை

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நில ஆர்ஜிதம் தொடர்பான இழப்பீடு வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 1036 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணையின் முடிவில் 873 வழக்குகளுக்கு ரூ.8 கோடியே 73 லட்சம் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குதாரர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Next Story