கட்டிட அறையில் அடைத்து வைத்துநிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்; சிறுவன் உள்பட 4 பேர் கைது
நெல்லையில் வாகனங்களை பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியரை கட்டிட அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக சிறுவன் உள்பட 4 ேபர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் வாகனங்களை பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியரை கட்டிட அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக சிறுவன் உள்பட 4 ேபர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
கோவை ஓரைக்கால்பாளையம் கணேசபுரம் நட்சத்திரா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் இவர், நிறுவனம் மூலம் வாகனங்கள் வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள் அதற்கான தவணை தொகையை கட்டாமல் இருந்தால் அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்.
அந்த நிதி நிறுவனத்தில் நெல்லை திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த நம்பிராஜன் (31) வாகனங்களை வாங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பிராஜன் வாங்கிய 4 கார்கள், 1 ஆட்டோவை சிவக்குமார் பறிமுதல் செய்து மதுரை அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.
ரூ.9 லட்சம்
இதனை அறிந்த நம்பிராஜன், சிவக்குமாரை தொடர்பு கொண்டு அவர் மூலமாக ரூ.9 லட்சத்தை நிதிநிறுவனத்தில் செலுத்தினார். அதன்பின்னர் 1 காரும், ஆட்டோவும் நம்பிராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்ற 3 கார்களுக்கும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நம்பிராஜன் தனது நண்பர்களான தங்க கிருஷ்ணன் (28), விக்னேஷ் மாரி (19) மற்றும் 17 வயது சிறுவனுடன் கோவைக்கு காரில் சென்றார். அங்கு சிவக்குமாரிடம் தனது வாகனங்கள் குறித்து பேச வேண்டும் எனக்கூறி அவரை காரில் ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு அழைத்து வந்தார்.
தாக்குதல்
நேற்று முன்தினம் அதிகாலையில் சிவக்குமாரை நெல்லை சேந்திமங்கலம் கியாஸ் குடோன் அருகே ஒரு கட்டிடத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் நம்பிராஜன் என்னிடம் வாங்கிய பணத்திற்கு 3 கார்களையும் கொடுத்துவிடு, இல்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று சிவக்குமாரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயத்தில் சிவக்குமார் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வர தொடங்கினர். இதையறிந்த நம்பிராஜன் உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
4 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நம்பிராஜன், தங்ககிருஷ்ணன், விக்னேஷ்மாரி மற்றும் 17 சிறுவனை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு உத்தரவுபடி அந்த சிறுவன் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டார். மற்ற 3 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.